அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- மோட்டார்சைக்கிளில் தப்பிசென்ற 2 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- மோட்டார்சைக்கிளில் தப்பிசென்ற 2 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Aug 2023 3:24 AM IST (Updated: 22 Aug 2023 9:41 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பணம் கொள்ளை

அந்தியூரில் இருந்து பவானி செல்லும் சாலையில் உள்ள அண்ணாமடுவு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை, துணி கடை, மோட்டார் கடை, ஹார்டுவேர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

அடுத்தடுத்த கடைகளிலும்...

இதேபோல் எலக்ட்ரிக்கல் கடை அருகே உள்ள 4 கடைகளுக்குள்ளும் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பணத்தையும் திருடியது தெரியவந்தது. உடனே இதுகுறித்து கடை உரிமையாளர்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு் விசாரணை நடத்தினார்கள். மேலும் எலக்ட்ரிக்கல் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமரா பதிவு

சம்பவத்தன்று இரவு முகமூடி அணிந்து கொண்டு மர்மநபர்கள் 2 பேர் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார்சைக்கிளில் கடைகள் முன்பு வந்து நிற்பதும், பின்னர் 2 பேரும் கடைகளின் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த பதிவை வைத்து போலீசார் மோட்டார்சைக்கிளில் வந்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அந்தியூர் பகுதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 5 கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் கடைக்காரர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.


Next Story