கால்நடை மருத்துவ முகாம்
கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் அருகே உள்ள மேலவண்ணம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை தாங்கினார். இதில் கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கன்றுகளுக்கு மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், நீண்ட நாள் சினை பிடிக்காத பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்டவை செய்யப்பட்டது. தொடர்ந்து கால்நடை நோய் புலனாய்வு குழுவினர் மூலம் அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ரத்தம், சாணம், பால் மாதிரிகள் ஆகியவற்றை சேகரித்து நோய் பரிசோதனை செய்தல் போன்ற பரிசோதனைகளும் நடைபெற்றன. இந்த முகாமில் 384 பசுக்களும், 575 வெள்ளாடுகளும், 400 கோழிகளும் பயன்பெற்றன. இம்மருத்துவ முகாமில் சினை பிடிக்காத மாடுகளுக்கும், கிடேரிக்கன்றுகளுக்கும் தாது கலவைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. மேலும் 10 கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்க்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் உதவி இயக்குனர் அரியலூர் மருத்துவர் சொக்கலிங்கம், கால்நடை ஆய்வாளர் செல்வராணி, கால்நடை உதவி மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.