சிவன் கோவில்களில் விடிய, விடிய பூஜை
மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி
மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசியன்று வருவது மகா சிவராத்திரி ஆகும். மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இது பல நற்பலன்களை தரக்கூடியதாகும். இத்தகைய மகா சிவராத்திரி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நேற்று இரவு முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வரை விடிய, விடிய பூஜை நடைபெற்றது. சிவன் கோவில்களில் இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி மற்றும் 4 மணி ஆகிய நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் சிவப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பய, பக்தியுடன் மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோகர்ணேசுவரர் கோவில், டவுன் சாந்தநாத சாமி கோவில், திருவேங்கைவாசல் சிவன் கோவில், திருவப்பூர் ஈஸ்வரன் கோவில், திருக்கோகர்ணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
சிவ பக்தர்களும் விரதம் இருந்து சிவராத்திரி வழிபாடு நடத்தினர். கோவில்களில் ஆன்மிக சொற்பொழிவுகளும், பரதநாட்டியங்களும், ஆன்மிக வைபவங்களும் நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஒவ்வாரு சிவன் கோவிலாக சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் அனைத்து சிவன்கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர்.
அறந்தாங்கி, ஆலங்குடி
இதேபோல அறந்தாங்கி, நாகுடி பகுதிகளில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆலங்குடியில் தர்ம சம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சிவராத்திரி விழா நடைபெற்றது. 4 கால பூஜைகள் நடைபெற்றது.இதுபோல் குப்பகுடி வெற்றி ஆண்டவர் சிவன்கோவில், கோவிலூர் பாலபுரீஸ்வரர் சிவன் கோவில்களிலும் மகாசிவராத்திரி விழா 6 கால பூஜைகளுடன் நடைபெற்றது.
கீரனூர், அரிமளம்
கீரனூர், குளத்தூர், மலையடிப்பட்டி, கிள்ளுக்கோட்டை, களமாவூரில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடும், அதனை தொடர்ந்து சிவராத்திரி விழாவும் நடைபெற்றது. இதில் 5 கால பூஜை நடைபெற்றது.
அரிமளம் அருகே நெடுங்குடி கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் இரவு முழுவதும் சிவாச்சாரியார்கள் பல்வேறு கால பூஜைகள் நடத்தினர். இதேபோல், அரிமளம், ராயவரம், கடியாபட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு 4 கால பூஜைகள் நடத்தப்பட்டது.
கைலாசபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கீரமங்கலம்
கீரமங்கலத்தில் ஒப்பிலாமணியம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் சுவாமி (சிவன்) கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி விழா நேற்று மாலையே தொடங்கியது. சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் பிரமாண்ட சிவன் சிலையை சுற்றி வந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பரதநாட்டியம், பாட்டுக்கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகள் விடியும் வரை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விராலிமலை
விராலிமலை அருகே விராலூரில் பூமீஸ்வரர் கோவில் உள்ளது. சிவராத்திரியையொட்டி பூமீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதே போல் விராலிமலை சந்தைப்பேட்டை பகுதியில் வன்னி மரத்தடியில் உள்ள சிவன் கோவிலும், ராஜாளிபட்டியில் உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூைஜகள் நடைபெற்றன.
இதேபோல் கறம்பக்குடி அருகே உள்ள கூகை புலையான் கொல்லை முத்துமாரியம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
ஆதனக்கோட்டை, திருவரங்குளம்
ஆதனக்கோட்டை அருகே சோத்துப்பாளை கிராமத்தில் கைலாசநாதர் உடனுறை செங்கமலநாச்சியம்மன் கோவில் மகாசிவராத்திரி விழா மற்றும் பிரதோஷம் நடைபெற்றது.
திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் அரங்குளநாதர் கோவிலில் சிவராத்திரியையொட்டி 4 கால பூஜைகள் நடைபெற்றது.ஒவ்வொரு கோவில்களிலும் திரளான பக்தர்கள் விடிய, விடிய நடந்த பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சனிப்பிரதோஷம்
இந்த நிலையில மகாசிவராத்திரி நாளான நேற்று சனிக்கிழமையில் பிரதோஷம் அமைந்தது கூடுதல் சிறப்பாக அமைந்தது. மாலையில் சிவன் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.