ராமேசுவரத்தில் விடிய, விடிய சிவராத்திரி சிறப்பு பூஜைகள்


ராமேசுவரத்தில் விடிய, விடிய சிவராத்திரி சிறப்பு பூஜைகள்
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:45 PM GMT)

மாசி மகா சிவராத்திரியையொட்டி ராமேசுவரம் கோவிலில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து ஏராளமானோர் வழிபட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மாசி மகா சிவராத்திரியையொட்டி ராமேசுவரம் கோவிலில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து ஏராளமானோர் வழிபட்டனர்.

ராமநாதசாமி கோவில்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் சிறப்பு பூஜைகள், வாகனங்களில் சாமி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 8-வது நாளான நேற்று மாசி மகாசிவராத்திரியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 10 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள் மர கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தொடர்ந்து அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகா சிவராத்திரி என்பதால் நேற்று பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படவில்லை.

வெள்ளித்தேர்

இரவு 9 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெள்ளித்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் ரதவீதிகளில் வெள்ளி தேர் உலா வந்தது.

நேற்று இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால சிறப்பு அபிஷேகம் சுவாமிக்கு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்ததால் சாமியை பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து பக்தி பாடல்களை பாடியபடி விரதம் இருந்தனர்.

மணலில் சிவலிங்கம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான வடமாநில பக்தர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து மணலில் சிவலிங்கம் செய்து அதற்கு கங்கை தீர்த்தம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்கள்.

தேரோட்டம்

விழாவின் 9-ம் நாளான இன்று காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் திட்டக்குடியில் உள்ள கோடிலிங்கரவிசாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

10-ம் நாள் விழாவான நாளை மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பகல் 12 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு, தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story