வால்பாறை சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு


வால்பாறை சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 15 Sep 2023 8:45 PM GMT (Updated: 15 Sep 2023 8:45 PM GMT)

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக வால்பாறை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக வால்பாறை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.

நிபா வைரஸ்

கேரளாவில் நிபா வைரஸ் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையானது தமிழக-கேரள எல்லையில் உள்ளது. இங்கு தினமும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.

தீவிர கண்காணிப்பு

இதனால் கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வால்பாறை அருகில் உள்ள கேரள எல்லையில் இருக்கும் சேக்கல்முடி, மளுக்கப்பாறை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கேரளாவில் இருந்து வரக்கூடியவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர்கள் உரிய பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

விவரங்கள் பதிவு

அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா? என்பதை உறுதி செய்து பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்கின்றனர். மேலும் வால்பாறை பகுதியில் உள்ளவர்களும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story