ரெயில் விபத்துகளை தடுக்க தீவிர கண்காணிப்பு
ரெயில் விபத்துகளை தடுக்க தீவிர கண்காணிப்பு
கோவையில் ரெயில் விபத்துகளை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோரமண்டல் ரெயில் உள்பட 3 ரெயில்கள் ஒடிசாவில் மோதியது.இதில் 278 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா ?அல்லது சிக்னல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
கோவையில் உத்தரவு
இது ஒருபுறம் இருந்தாலும்....இந்த விபத்து ரெயில் பயணத்தை விரும்பும் பயணிகளிடம் ஒருவித அச்சத்தை ஏற்ப டுத்தி உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவை ரெயில்நிலையங்களில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம், சிக்னல் இயக்கம் ஆகியவை தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தபடி யாக தண்டவாளம் மற்றும் சிக்னல்களில் சிறிய அளவு குறைபாடுகள் இருந்தாலும், உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் ரெயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
24 மணி நேரமும் ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து 20 பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
தண்டவாள பராமரிப்பு
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை ரெயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம் மற்றும் சிக்னல் இயக்கம் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில், ஊழியர்கள் மிகவும் கவனமாக வேலை பார்த்து வருகின்றனர். எனவே பயணிகள் அவசிய மின்றி பயப்பட தேவை இல்லை என்றனர்.
அதிநவீன தொழில்நுட்பம்
பொதுவாக ரெயில் விபத்துகளை 'கவாச்' என்னும் அதிநவீன தொழில்நுட்ப அமைப்பின் மூலம் தடுக்கலாம். இந்த தொழில்நுட்பம் ஒடிசாவில் பல்வேறு இடங்களில் இருந்தும், விபத்து நடந்த இடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில் என்ஜின் டிரைவரின் தவறினாலோ அல்லது பிற காரணங்களினாலோ நேருகிற ரெயில் விபத்துகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு.
இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி முறையில் இயங்குவது ஆகும். இது இந்திய ரெயில்வேக்காக 'ஆர்.டி.எஸ்.ஓ.' என்று அழைக்கப்படுகிற ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலை அமைப்பு, இந்தியாவின் 3 விற்பனை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.
விரைவில் வருகிறது
ரெயில் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சினை இருந்து வருகிறது. ரெயிலை இயக்கும் டிரைவர் சிக்னலை தவற விடுகிறபோது, இந்த அமைப்பு அவரை உஷார்படுத்தி விடும்.
மேலும், 2 ரெயில்கள் அதிவேகமாக வரும்போது தடம் மாறி மற்றொரு ரெயிலுடன் மோதும் வாய்ப்பு ஏற்படுமானால் தன்னிச்சையாகவே ரெயிலின் வேகம் குறைக்கும் தொழில்நுட்பத்தை இந்த 'கவாச்' அமைப்பு கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்த 'கவாச்' தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு, நாட்டில் 1,455 கி.மீ. தடங்களில்தான் உள்ளதாக தெரிகிறது.
இது நாடு முழுவவதும் முக்கிய இடங்களில் பொருத்தப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, சேலம் ரெயில்வே கோட்டத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் விபத்தை தடுக்கும் 'கவாச்' தொழில்நுட்பம் விரைவில் வருகிறது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.