தேசியக்கொடி ஏற்றிவிட்டு கையசைத்த விஜயகாந்த் - கண்கள் கலங்க "கேப்டன்.. கேப்டன்" என கத்திய தொண்டர்கள்...!


தேசியக்கொடி ஏற்றிவிட்டு கையசைத்த விஜயகாந்த் - கண்கள் கலங்க கேப்டன்.. கேப்டன் என கத்திய தொண்டர்கள்...!
x

கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக்கொடி ஏற்றினார்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டும் வருகிறார். இதனால், அவர் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வெகுவாக குறைத்தும் வந்தார்.

மேலும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வந்தார். இந்நிலையில், 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

அவருடன், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் வந்தனர். பின்னர் கட்சி அலுவலகத்தில் இருந்த 118 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை பிரேமலதா உதவியுடன் விஜயகாந்த் ஏற்றி வைத்து. இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து, அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த், அவர்களை பார்த்து கையசைத்து மகிழ்வித்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் சிலர் கண்ணீர் மல்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து தாங்கள் கவலை படுவதாகவும், விரைவில் அவர் பூரண நலம் பெற்று அரசியல் களத்திற்கு வரவேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் தொண்டர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.



Next Story