தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை


பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

ராமநாதபுரம்


பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

சசிகலா

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நேற்று மதியம் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நினைவிடத்தில் சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து சசிகலா, தேவர் வசித்த வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது உறவினரும் நினைவிட பொறுப்பாளருமான காந்திமீனாளை சந்தித்து நலம் விசாரித்தார்.

அந்த நேரத்தில் தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா, தேவருக்கு மரியாதை செலுத்திவிட்டு சென்ற பிறகு உதயநிதி ஸ்டாலின், திமு.க. நிர்வாகிகளுடன் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

வைகோ

தேவர் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. உள்பட அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் இரண்டும் ஒன்றாக அமைந்த தலைவர் தேவர். நான் 6-ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வீட்டிற்கு தேவர் வந்தார். அவர் காங்கிரசை ஆதரிக்க கூடாது என்று எனது தந்தையாரிடம் கூறினார். அவரும் அந்த தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கவில்லை. அப்போது தேவரின் உருவம் என் மனதிலே பதிந்தது. அவர் தமிழ், ஆங்கிலத்தில் மணிக்கணக்கில் உரையாற்றக்கூடிய வல்லமை பெற்றவர். அவரை பின்பற்ற வேண்டும் என்று நினைத்தவன் நான். 42 ஆண்டுகளாக நான் பசும்பொன்னிற்கு வந்து கொண்டிருக்கிறேன்.

பசும்பொன்னின் புகழ் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் ஓங்கி உயருமே தவிர ஒருபோதும் தாழ்ந்துவிடாது. இந்த நேரத்தில் சாதி, மத பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று யார் நினைத்தாலும் அது நடக்காது. அது நடக்க கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அதற்கு இடமில்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.டி.வி.தினகரன்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர்

பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவர் நினைவிடத்தில் அ.ம.மு.க சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக மக்கள் பேசுகிறார்கள். இந்த ஆட்சி விரைவில் வீட்டிற்கு செல்லும் காலம் வரும். இன்றைக்கு போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சி வருகிறதோ அப்போது ரவுடியிசம், தீய சக்திகளின் நடமாட்டம் தலைவிரித்து ஆடும். மக்கள் எதற்காக இவர்களுக்கு வாக்களித்தோம் என்று வருத்தப்படுகின்றனர்.

இன்னொரு கட்சி பற்றி நான் பேச தேவையில்லை ஏற்கனவே அவர்கள் இருவரும் 2017-ல் யாரால் ஒன்று சேர்த்து வைக்கப்பட்டார்களோ, அவர்கள் மனது வைத்தால் தான் மீண்டும் அவர்கள் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது

தேவர் ஜெயந்தி விழாவுக்காக கலெக்டர் நடத்திய கூட்டத்தில் எந்த கட்சியை சேர்ந்தவர்களும் கொடி கட்டக்கூடாது, பேனர் வைக்கக்கூடாது என்று முடிவெடுத்தார்கள். ஆனால் ஆளும் கட்சி அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் நடந்தது. அதனை பொதுமக்களே கிழித்து எறிந்த போது, எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது தீபாவளி நேரத்தில் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள். அந்த ஆட்சிக்கும், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. பெயர் மட்டுமே வேறுபாடு. இது விடியல் அரசு அல்ல. அவரே சொன்னார், எனக்கு விடிந்தால் பயமாக இருக்கிறது என்று. முதல்-அமைச்சரே பயப்படும் அளவில்தான் தமிழ்நாடு இருக்கிறது. தமிழக கவர்னர் போன்று ஒருவர் இல்லை என்றால், இவர்களது அராஜகம் அதிகமாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.கே. மணி-கருணாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மூத்த தலைவர் ஜி.கே. மணி, அக்கட்சி நிர்வாகிகளுடன் மரியாதை செலுத்தினார்.

முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ், மாநில பொருளாளர் முத்துராமலிங்கம் உட்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினா். மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் மற்றும் பல்வேறு அமைப்புகள் கட்சிகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.


Related Tags :
Next Story