ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x

கரூரில் விவசாய நிலத்தை பட்டா மாற்ற ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

பட்டா மாறுதல் செய்ய மனு

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மாவத்தூர் ஊராட்சி, சின்னாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 45). இவர் தனது விவசாய நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக மாவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமாரபாண்டியன் என்பவரிடம் மனு கொடுத்தார்.

அதற்கு அவர் நிலத்தை பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.17 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என இளையராஜாவிடம் அவர் கேட்டுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூ.17 ஆயிரத்தை நேற்று மதியம் ரெட்டியப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் குமாரபாண்டியனிடம், இளையராஜா கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் குமாரபாண்டியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரபாண்டியன் ஏற்கனவே குளித்தலை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்தபோது பல்வேறு முறைகேடுகள் செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story