ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
சிவகாசி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பட்டா மாற்ற லஞ்சம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா கீழத்திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் உமாவதி (வயது 45). இவர் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர். இந்த அலுவலகத்தில் கிராம உதவியாளராக பொன்ராஜ் (48) பணியாற்றி வந்தார்.
பள்ளபட்டி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பிரித்விராஜ். இவர், தான் வாங்கிய நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய செங்கமலப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் உமாவதியிடம் மனு கொடுத்தார். அதற்கு உமாவதி, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தந்தால் பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுப்பதாக தெரிவித்தாராம்.
கைது
இதைதொடர்ந்து பிரித்விராஜ், விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார். அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கொண்டு சென்ற பிரித்விராஜ், கிராம நிர்வாக அலுவலர் உமாவதி மற்றும் உதவியாளர் பொன்ராஜிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் ராமச்சந்திரன், பூமிநாதன் ஆகியோர் உமாவதி, பொன்ராஜை கைது செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.