ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
திண்டிவனம் அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 28) விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் 6½ சென்ட் வீட்டுமனையை ரூ.30 லட்சத்திற்கு வாங்கி உள்ளார். அதனை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒலக்கூர் கிராமத்துக்கு கூடுதல் பொறுப்பு வகித்து வரும் ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலரான கருணாகரனிடம் (39) மனு கொடுத்தார். அதற்கு அவர் பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.
இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார், இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
கைது
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஏட்டு்கள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி மற்றும் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று அசோக்குமாரிடம் கொடுத்து, அதனை கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனிடம் கொடுக்குமாறு கூறினர்.
அதன்படி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அசோக்குமார் சென்றார். பின்னர் லஞ்ச பணத்தை அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனிடம் அசோக்குமார் கொடுத்தார்.
அதனை கருணாகரன் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.