கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட அளவில் இடமாற்றம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட அளவில் இடமாற்றம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அரசு உத்தரவு.
சென்னை,
தமிழகத்தின் கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட அளவில் பணியிட மாற்றங்களை பெற வேண்டும் என்றால் முன்பு அவர்கள் கைப்பட கடிதம் எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அது ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ. ஆகியோரின் ஒப்புதலை பெற்று மாவட்ட கலெக்டரிடம் செல்லும். பின்னர் அங்கிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுபோல அவர் மாறுதலாகி செல்லும் மாவட்டத்தின் கலெக்டரும் அதற்கேற்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் மாறுதல் உத்தரவை பெற சில நேர்வுகளில் 3 ஆண்டுகள் வரை ஆகிவிடக்கூடும்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று அரசை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரி வந்தது. அதன்படி, தற்போது ஒருவழி மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வகுத்தளித்துள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எம்.ஏ.சித்திக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஒருவழி மாவட்ட மாறுதலை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பதற்கான பயிற்சியை அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ஆர்.டி.ஓ. மூலம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.