பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகங்கள் சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்பு


பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகங்கள்    சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகங்களால் சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி


மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் வடபொன்பரப்பி குறுவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் தனி தனியாக கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.

இதன் மூலம் அந்த பகுதியை சோந்த மக்கள் தங்களுக்கு தேவையான சான்றுகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது, கிராம நிர்வாக அலுவலர் பற்றாக்குறை காரணமாக, ஒரு கிராம நிர்வாக அலுவலர் கூடுதலாக 3 முதல் 4 கிராமங்களை கவனித்து வருகிறார்கள்.

சான்றிதழ் பெற முடியவில்லை

இதனால், கடுவனூர், பாக்கம் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலகம் கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கேட்டபோது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாக்கம், கடுவனூர், கானாங்காடு, தொழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் இருந்தனர். ஆனால் தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் இப்பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு வருவதில்லை. மேலும் நாங்கள் சான்றிதழ் பெறுவதற்கும் சிட்டா, அடங்கல் மற்றும் விவசாய சான்றுகள் பெறுவதற்கும் சென்று கேட்டால் நாங்கள் வேறு ஒரு கிராமத்தை பார்த்து வருவதால் நீங்கள் நாளை வாருங்கள் என்று அலைக்கழிகப்படுவதாக கூறுகின்றனர். இதனால் பல மாதங்களாக சான்றுகள் பெற முடியாமல் தவிப்பதாக தெரிவித்தனர்.

நடவடிக்கை தேவை

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கூறுகையில் சில பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பயிற்சிக்காக சென்றுள்ளனர் அதனால் கூடுதலாக மற்ற கிராமத்தையும் பார்க்கக்கூடிய நிலை உள்ளது. எனவே பணி சுமை அதிகரித்துள்ளது என்றார். மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதியை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

1 More update

Next Story