கிராம நிர்வாக அலுவலர் கைது
தேனி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்
தேனி அருகே பூதிப்புரம் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் ஜெயக்குமார் (வயது 36). இவர், கடந்த ஆண்டு கோடாங்கிபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அப்போது அந்த அலுவலகத்தில் தற்காலிக தட்டச்சராக 24 வயது பெண் வேலை பார்த்தார். அந்த பெண், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், 'ஒரு ஆண்டுக்கு முன்பு ஜெயக்குமாரிடம், குடும்ப பிரச்சினை காரணமாக ரூ.2 லட்சம் கடன் வாங்கி எனது மாமியாரிடம் கொடுத்தேன். இந்நிலையில், ஜெயக்குமார் என்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார். மேலும் என்னை, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவுக்கு அழைத்துச் சென்று நெருக்கமாக இருக்குமாறு கூறி பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அதை வைத்துக் கொண்டு அவர் சொல்வது போன்று கேட்க வேண்டும் என்று மிரட்டினார். இந்த புகைப்படங்களை எனது கணவர் பார்த்து விட்டு என்னை திட்டினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
கைது
இந்த புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்த பெண்ணின் கணவருடைய செல்போனில் இருந்து புகைப்படத்தை எடுத்து உறவினர் நாராயணராஜா மற்றும் அவருடைய நண்பர் உள்பட 4 பேர் சேர்ந்து ஜெயக்குமாரிடம் பணம் பறித்ததாக புகார் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரின் பேரில் நாராயணராஜா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.