கிராம நிர்வாக அதிகாரி மர்ம சாவு
விராலிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா மிரட்டு நிலையை சேர்ந்தவர் குடியரசு மகன் சிதம்பரம் (வயது 39). இவர், விராலிமலையை அடுத்த வெம்மணி கிராமம் அருகே உள்ள நீர்பழனியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சிதம்பரம் விராலிமலை அருண் கார்டன் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிதம்பரம் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து கிராம உதவியாளர் பன்னீர் அருண்கார்டனில் உள்ள சிதம்பரம் தங்கியிருந்த வீட்டில் சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டில் கிராம நிர்வாக அதிகாரியான சிதம்பரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி ஜீவானந்தத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.