ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x

காந்தி ஜெயந்தியையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

சேலம்

கிராம சபை கூட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கல்பட்டியில் காந்தி ஜெயந்தியையொட்டி, கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கார்மேகம் பங்கேற்று பேசினார். இதில் கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் சுவாதிஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் தமிழரசி, வெள்ளக்கல்பட்டி ஊராட்சி தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கலெக்டர் கார்மேகம் பேசுகையில், மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்துகிறார். பொதுமக்கள் கிராம சபை கூட்டம் மட்டும் அல்லாமல், கோரிக்கைகளை ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கலாம். முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு 7 நாட்களில் பதில் அளித்து வருகிறோம். சுற்றுப்புற சுகாதாரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள தனி கவனம் செலுத்த வேண்டும். டெங்கு கொசு பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற தலைப்பில் வெளியிட்ட காணொலி தொகுப்பை கலெக்டர் கார்மேகம், பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்

தலைவாசல்

காந்தி ஜெயந்தியையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடந்தது. அதன்படி தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் அசோக் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, இளங்கோ, ஊராட்சி துணைதலைவர் விமலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் உதவி கலெக்டர் ரமேஷ் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஆனந்தன் வரவு-செலவு வாசித்தார்.

கூட்டத்தில் தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பழனிசாமி, வட்டார தலைமை மருத்துவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கிராமசபை கூட்டத்தின் அவசியம் குறித்தும், அதன்மூலம் செயல்படுத்துகிற திட்டங்கள் குறித்தும் பேசியது காண்பிக்கப்பட்டது.

மணிவிழுந்தான்

தலைவாசல் ஒன்றியம் மணிவிழுந்தான் ஊராட்சி ராமேசபுரம் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். ஒன்றிய என்ஜினீயர் சுஜிதா பார்வையாளராக கலந்து கொண்டார்.

ஊராட்சி செயலாளர் சுகந்தி வரவு- செலவு வாசித்தார். ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.புதூர் ஊராட்சி

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் அ.புதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் காட்டூர் அய்யனாரப்பன் கோவிலில் நடந்தது. ஊராட்சி தலைவர் அய்யமுத்து தலைமை தாங்கினார். மகுடஞ்சாவடி ஒன்றியக்குழு தலைவர் லலிதா முன்னிலை வகித்தார். இதில் முதல்-அமைச்சரின் நேரடி உரை ஒளிபரப்பப்பட்டது. குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதிகள், என அடிப்படை வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அமானி கொண்டலாம்பட்டி

அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் சாலை, சாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டன. .

இருப்பாளி

இருப்பாளி ஊராட்சி அம்மாசி ஊர் மாரியம்மன் கோவில் திடலில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் அலமேலு ஈட்டிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் குடிநீர், சுகாதாரம், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவுசிக், வேளாண் துறை மகாலிங்கம், கால்நடை டாக்டர் ்வெள்ளையகவுண்டர், தலைமை ஆசிரியர் ரத்தினவேல், வார்டு உறுப்பினர்கள் ஸ்ரீதர், முருகன், குமார், அழகேசன், செயலாளர் கோவிந்தராஜ், பணியாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


Next Story