கிராம சபை கூட்டம்
கொல்லிமலை அடிவாரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சியில் உள்ளது காரவள்ளி. கொல்லிமலை அடிவாரப் பகுதியான அங்கு நேற்று குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் தலைமை தாங்கினார். நாமக்கல் வனச்சரகர் பெருமாள் முன்னிலை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது;
நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அடிவாரப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என காணப்படும் இந்த பகுதியினை நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் சாலை ஓரத்தில் கொட்டி கிடக்கும் சருகுகளில் தீ விபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும், வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாயிகள் அப்பகுதியில் தீ ஏதும் வைக்காமல் பாதுகாத்திட வேண்டும், எப்பகுதியில் ஏனும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை ஊராட்சி செயலர் பிரகாஷ் பொதுமக்கள் முன்னிலையில் படித்தார். வனக்காப்பாளர்கள் கவாஸ்கர், சரவணபெருமாள், வனக்காவலர் கனகராஜ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.