பெரியசீரகாபாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்


பெரியசீரகாபாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
x

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய சீரகாபாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பங்கேற்று பேசினார்.

சேலம்

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய சீரகாபாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பங்கேற்று பேசினார்.

கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தையொட்டி சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், பெரிய சீரகாபாடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கூட்டங்களில் ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளால் கிராமப்புற மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

கிராமங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் பணிகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்தல், திறந்தவெளி மலம் கழிக்கப்படாத ஊராட்சிகளாக அறிவித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கோரிக்கை மனுக்கள்

இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கி உள்ளனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் காா்மேகம் பேசினார்.

முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், சமூக நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

இதில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், ஊராட்சி உதவி இயக்குனர் தமிழரசி, பெரிய சீரகாபாடி ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பொண்ணு மெய்வேல், வீரபாண்டி வட்டார அட்மா திட்டக்குழுத் தலைவர் வெண்ணிலா சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story