கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், தாய் சேய் நலப்பணிகளில் மட்டும் சுகாதார செவிலியர்களை ஈடுபடுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்,, நீண்டகாலமாக வழங்கப்படாமல் உள்ள கொரோனா ஊக்குவிப்புத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த பணியிடங்களை ரத்து செய்து நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட தலைவி விமலா தலைமை தாங்கினார். செயலாளர் ராஜலெட்சுமி, பொருளாளர் சாந்தி, பரமக்குடி தலைவி சியா, செயலாளர் நல்லமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாநில தலைவர் நிர்மலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான செவிலியர்கள் கலந்துகொண்டனர்.