கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்தானலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் மெர்சி கிளாரா, பொருளாளர் நளினி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில செயல் தலைவர் கோமதி, மாநில தலைவர் மீனாட்சி உள்ளிட்டோர் செவிலியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள், கணினி பதிவேற்றாளராக கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்களை இயக்கக்கூடாது. தாய்-சேய் நலம் நல்வாழ்வு திட்டப்பணிகள் அனைத்தையும் அடித்தட்டு மக்களிடம் தரமாக தாமதமின்றி கொண்டு செல்லும் கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்களை களப்பணியை செய்யவிட வேண்டும். யு-வின் உள்ளிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் பணிக்கு டி.இ.ஒ. பணி அமர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசையும், பொது சுகாதார துறையையும் வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story