கிராம ஊராட்சிகள் எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது -தமிழக அரசு உத்தரவு


கிராம ஊராட்சிகள் எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது -தமிழக அரசு உத்தரவு
x

கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் வரி செலுத்துவதற்காக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகள் எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக கமிஷனர் டாக்டர் தாரேஸ் அகமது, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது பொதுவெளியில் 22-ந்தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இதன்மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள் செலுத்தவேண்டிய வீட்டு வரி தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இந்த இணையதளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிம கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்களை இந்த இணையதளத்தின் மூலமாக இணையவழி கட்டணம், ரொக்க அட்டைகள், யூ.பி.ஐ. கட்டணம் மற்றும் பி.ஓ.எஸ். (பாய்ண்ட் ஆப் சேல்) எந்திரங்களின் மூலமாக செலுத்தலாம்.

ரொக்கமாக பெறக்கூடாது

கிராம ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார பகிர்ந்தளிப்புக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி முழுமையான இணையவழி மட்டுமே தரப்படவேண்டும். இதற்கென பிரத்யேகமாக இணையதளம் https://onlineppa.tn.gov.in/ என்ற முகவரியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சியால் விண்ணப்பதாரருக்கு கேட்பு தொகையினை விண்ணப்பதாரர் இணைய வழியிலேயே செலுத்தும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகள் எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. இணையவழியில் ஆன்லைன் பி.பி.ஏ. தளத்தின் மூலம் மட்டுமே பெறவேண்டும். அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலர்கள், அனைத்து ஊரக வளர்ச்சித்துறை கள அலுவலர்களும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story