ஒரு தரப்பினர் திருவிழா நடத்த எதிர்ப்பு:மலையூர் கோபால்சாமி கோவிலில் கிராம மக்கள் உண்ணாவிரதம்வீடுகளில் கருப்புக்கொடி கட்டினா்


ஒரு தரப்பினர் திருவிழா நடத்த எதிர்ப்பு:மலையூர் கோபால்சாமி கோவிலில் கிராம மக்கள் உண்ணாவிரதம்வீடுகளில் கருப்புக்கொடி கட்டினா்
x
தினத்தந்தி 15 Oct 2023 7:00 PM GMT (Updated: 15 Oct 2023 7:00 PM GMT)

பிக்கிலி ஊராட்சி மலையூரில் ஒரு தரப்பினர் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோபால்சாமி கோவிலில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பிக்கிலி ஊராட்சி மலையூரில் ஒரு தரப்பினர் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோபால்சாமி கோவிலில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பணம் கையாடல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட மலையூர் கிராமத்தில் மலைஉச்சியில் பழமைவாய்ந்த கோபால்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் திருவிழாவும், நவராத்திரியின்போது சாமி திருக்கல்யாணம் நடைபெறும். இந்நிலையில் கோவில் நிர்வாகிகள் கோவில் பொது பணத்தை கையாடல் செய்ததாக ஒரு தரப்பினர் கடந்த ஜனவரி மாதம் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கலெக்டர் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கோவில் பணத்தை நிர்வாகிகள் பெயரில் வங்கியில் கூட்டாக கணக்கு தொடங்கி வரவு, செலவை பராமரிக்க வேண்டும் என்றும், கிராம மக்கள் அனைவரையும் இணைத்து கொண்டு திருவிழா நடத்த வேண்டும் என்று உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.

உண்ணாவிரதம்

இதற்கிடையே உதவி கலெக்டர் உத்தரவை மீறி முறைகேட்டில் ஈடுபட்டு ஒரு தரப்பினர் தன்னிச்சையாக திருவிழா நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உதவி கலெக்டர் உத்தரவை அமல்படுத்தகோரியும், ஒரு தரப்பினர் மட்டும் கோவில் திருவிழாவை நடத்தக்கூடாது என்றும் மலையூர் கிராமத்தில் கிராம மக்கள் நேற்று தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினா். பின்னர் மலை உச்சியில் உள்ள கோபால்சாமி கோவில் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பென்னாகரம் தாசில்தார் (பொறுப்பு) அன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சவார்த்தை நடத்தினார். இதையடுத்து கோவில் உண்டியல், அன்னதானக்கூடம், பொருட்கள் சேமிப்பு அறை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மாவட்ட கலெக்டர் மறு உத்தரவு வரும் வரை திருவிழா நடத்த அனுமதிக்கப்படாது என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story