அடிப்படை வசதிக்காக ஏங்கி தவிக்கும் கிராம மக்கள்


வடகாடு அருகேயுள்ள சுக்கிரன்குண்டு பகுதியில் வசிக்கும் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

அடிப்படை வசதிகள் இல்லை

வடகாடு அருகே உள்ள அனவயல் எல்.என்.புரம் ஊராட்சிக்குட்பட்ட சுக்கிரன்குண்டு பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ஆனால் இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இவர்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டைகள் கூட இல்லை.

மேலும் நீர் நிலையோரங்களில் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வரும் இவர்கள் விவசாய கூலிவேலை செய்வதுடன், ஆண்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தென்னை மரங்களில் தேங்காய்களை பறிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் விவசாய தோட்டங்களில் களையெடுக்கும் பணிகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

பள்ளிகளில் சேர்ப்பு

இப்பகுதி மக்கள் கல்வியறிவிலும் பின் தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். கூலி வேலைக்காக பெற்றோர் வெளியூர்களுக்கு செல்லும் போது குழந்தைகளையும் கூடவே அழைத்து சென்றுவிடுவதால் இவர்களின் குழந்தைகளில் பலர் பள்ளிப்படிப்பை கூட முடிக்கவில்லை.

தற்போது சமூக ஆர்வலர்கள், அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் முயற்சியால் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அருகாமையில் உள்ள புளிச்சங்காடு, அனவயல், பட்டிபுஞ்சை, காசிம்புதுப்பேட்டை அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்தப்பகுதியில் சிலர் மட்டுமே கல்லூரி படிப்பிற்கு சென்றுள்ளனர். மற்ற யாரும் உயர் கல்வியை எட்டக்கூட முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

பழுதடைந்த சாலை

அம்பிகா:- சுக்கிரன்குண்டு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் நாங்கள் பழுதடைந்த குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் விஷப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

தொண்டு நிறுவனங்கள் உதவி

வள்ளிக்கன்னு:- பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் நாங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதிய உபகரணங்கள் இல்லாததால் சிமெண்டால் உடற்பயிற்சி உபகரணங்களை தயார் செய்து அதனை பயன்படுத்தி வருகிறார்கள். எங்களின் துயர் கண்டு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது சிறு சிறு உதவிகளை செய்து வருகின்றனர். எனவே எங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு

நாடியம்மா:- பிழைப்பை தேடி பல்வேறு இடங்களுக்கு செல்வதால் எங்களுடைய குழந்தைகளுக்கு போதிய கல்வியறிவு கிடைக்கவில்லை. மேலும் இப்பகுதி மக்கள் பலருக்கு ரேஷன்கார்டு, ஆதார் அட்டை இல்லை. இரவு நேரங்களில் விஷஜந்துகளின் தொல்லை அதிகரித்து வருவதால் நாங்கள் மிகவும் அச்சத்துடனே குழந்தைகளுடன் வசித்து வருகிறோம். எனவே எங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களுக்கு வேலைவாய்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story