அரசு டவுன் பஸ் இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதி
தேனி- மயிலாடும்பாறைக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தேனி பஸ்நிலையத்தில் இருந்து தினமும் காலை 11 மணியளவில் மயிலாடும்பாறைக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. அதே பஸ் மீண்டும் மயிலாடும்பாறையில் இருந்து தேனிக்கு சென்று மீண்டும் 4.30 மணிக்கு வந்து சேரும். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக காலை 11 மணிக்கு தேனியில் இருந்து மயிலாடும்பாறைக்கு புறப்படும் டவுன் பஸ் கண்டமனூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் கண்டமனூரில் இறங்கி மீண்டும் வேறு பஸ்கள் மூலம் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறையை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதேபோல தேனியில் இருந்து புறப்படும் போது மயிலாடும்பாறை என்று பெயர் பலகையுடன் இயக்கப்படுகிறது. ஆனால் பஸ் கிளம்பி சிறிது தூரத்தில் கண்டமனூர் வரை மட்டுமே செல்லும் என்றும், காரணம் கேட்டால் பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதாகவும் கண்டக்டர் கூறுவதாக, கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் மயிலாடும்பாறை வரை அரசு டவுன் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.