வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் முற்றுகை
மன்னவனூரில் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் கடந்த 2-ந்தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று, மன்னவனூரில் உள்ள சமுதாய கூடத்தில் கிராம சபை கூட்டம் மீண்டும் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வரவேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணன் வந்தார். அதன்பின்னர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குழாய் அமைத்தல், தண்ணீர் தொட்டி புதிதாக கட்டுதல், நடைபாதைக்கு கற்கள் பதித்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முறையாக செய்யாமலும், பல்வேறு வளர்ச்சி பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், ஊழல் நடைபெற்றதாகவும் கூறி கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சியில் வரவு-செலவு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அப்பகுதி இளைஞர்கள் செல்போனில் காண்பித்தனர்.
இதைத்தொடர்ந்து பதில் எதுவும் கூறாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் வெளியேற முயன்றார். உடனே சமுதாய கூடத்தின் கதவை கிராம மக்கள் பூட்டி, அவரை செல்லவிடாமல் முற்றுகையிட்டனர். இதையடுத்து பணிகளில் ஊழல் நடைபெற்று இருந்தால், அதுதொடர்பாக ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். உடனே கிராம மக்கள் புகார் மனுவை கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். அதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.