குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் குடிநீர் கேட்டு காலி குடங் களுடன் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் கூத்தக்குடி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வசித்து வரும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த குடிநீர் எங்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் பெரும்பாலான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதன் காரணமாக நாங்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய கிணறுகளை தேடிச் சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகிறோம். இதனால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும்

இது குறித்து புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க எங்கள் பகுதியில் கூடுதலாக ஒரு மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் கிராமமக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story