சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் - அரசு பஸ் சிறைபிடிப்பு


சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் - அரசு பஸ் சிறைபிடிப்பு
x

கும்மிடிப்பூண்டி அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது ஏடூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஏடூர் கிராமத்தில் உள்ள 2,3 மற்றும் 4 ஆகிய வார்டுகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குடியிருப்புகள் சூழ்ந்த இப்பகுதியில் முறையான சாலையின்றி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அப்பகுதி மக்கள் தினமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை ஏடூர் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை.

இந்நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய சாலை அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று காலை ஏடூரில் இருந்து மாதர்பாக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவ்வழியாக மாதர்பாக்கத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், தாசில்தார் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பழுதடைந்த சாலைகளை புதிதாக போடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து தங்களது 2 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story