குளம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கடலூர் அருகே குளம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடுவீரப்பட்டு,
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு எஸ்.புதுக்குப்பத்தில் குட்டையாண்டி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 11 மணி அளவில் நடுவீரப்பட்டு-சத்திரம் சாலையில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, நடுவீரப்பட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.