கிராமமக்கள் சாலை மறியல்

புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பிவயல் கிராமத்தை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் நம்பிவயல் வருவாய் கிராமத்தை புதிதாக உருவாக்கப்படவுள்ள திருவோணம் தாலுகாவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை நம்பிவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு பட்டுக்கோட்டை-செங்கிப்பட்டி சாலையில் பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை கையில் வைத்திருந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போவதாக கூறி கோஷமிட்டனர்.
அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நம்பிவயல் வருவாய் கிராமத்தை புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவோணத்தில் சேர்க்கக்கூடாது எனக் கூறி கிராமமக்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உங்களது கோரிக்கை குறித்து மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.