ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்,
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணாங்குடிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 2 கட்டிடங்கள் இருந்தது. இதில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் மாணவர்கள் கல்விபயில வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை வகுப்பறையாக பயன்படுத்தி வந்தனர்.
கிராம மக்கள் எதிர்ப்பு
இந்த சூழ்நிலையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட இடத்தில், புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்காக பூமி பூஜைகள் போடப்பட்டு கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டது. இதுபற்றி அறிந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம், எங்கள் கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் நல்ல முறையில் உள்ளது, எனவே ஏற்கனவே இடிக்கப்பட்ட இடத்தில் பள்ளிக்கட்டிடம் கட்டித்தர வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
சாலை மறியல்
ஆனால், இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் நேற்று, அந்த பகுதியில் விருத்தாசலம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி , ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும், மாணவர்களுக்கு கல்வி வழங்க பள்ளி கட்டிடம் தேவை என்று கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி கட்டிடம் கட்டித் தருவதாக உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது.
இதனிடையே, வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி மற்றும் போலீசார், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.