சாமி சிலையை தராததால் கிராம மக்கள் சாலை மறியல்


சாமி சிலையை தராததால் கிராம மக்கள் சாலை மறியல்
x

சாமி சிலையை தராததால் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

சாமி சிலை

திருச்சி மாவட்டம், கல்லணை அருகே உள்ள கிளிக்கூடு கிராமத்தில் அரசால அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிலையை கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர், உத்தமர்சீலி ஆகிய ஊர்களில் நடைபெறும் திருவிழாவிற்கு எடுத்துச்செல்வது வழக்கம். இந்த நிலையில் உத்தமர்சீலி கிராமத்தினர் கடந்த 1, 2-ந் தேதிகளில் செல்லாயி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்காக, கடந்த மாதம் 15-ந் தேதி பவுர்ணமி தினத்தன்று அரசால அம்மன் கோவில் சிலையை இரவல் வாங்கி திருவிழா நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கிளிக்கூடு கிராமத்தினர் தங்களது ஊரில் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் திருவிழா நடத்த திட்டமிட்டு, அதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதையொட்டி கடந்த 5-ந் தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மேளதாளங்கள் முழங்க உத்தமர்சீலி கிராமத்திற்குச் சென்று, தங்கள் ஊரில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அரசால அம்மன் சிலையை கேட்டதாகவும், ஆனால் உத்தமர்சீலி கிராம மக்கள் அரசால அம்மன் சிலையை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

காவு கொடுத்த பிறகு...

இந்த நிலையில் நேற்று உத்தமர்சீலியை சேர்ந்த மக்கள், கிளிக்கூடு கிராமத்தினர் வந்து சிலையை பெற்று செல்லுமாறு கூறியதை தொடர்ந்து நேற்று கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உத்தமர்சீலி கிராமத்திற்கு சென்று தங்களுக்கு சொந்தமான அரசால அம்மன் சிலையை கேட்டதாக தெரிகிறது. அப்போது உத்தமர்சீலியை சேர்ந்தவர்கள், கவுத்தரசநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லேந்திர கருப்பு சிலையும் கிளிக்கூடு திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் கவுத்தரசநல்லூர் கிராமத்தினர், தங்கள் ஊரில் நல்லேந்திர கருப்பிற்கு காவு கொடுத்த பிறகு, அந்த சிலை வழங்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் உத்தமர்சீலியில் இருந்து அரசால அம்மன் சிலையை கொடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கல்லணை-திருவானைக்காவல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக அரசால அம்மன் சிலையை கொண்டு வந்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் சுமார் 1½ மணி நேரத்துக்கும் மேலாக கல்லணை-திருவானைக்காவல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story