பழுதான குடிநீர் மின்மோட்டாரை சரி செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
குள்ளஞ்சாவடி அருகே பழுதடைந்த குடிநீர் மின் மோட்டாரை சரி செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குள்ளஞ்சாவடி,
குள்ளஞ்சாவடி அருகே உள்ள வழுதலம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வன்னியர்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் மின் மோட்டார் திடீரென பழுதானது. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பழுதான குடிநீர் மின் மோட்டாரை சரி செய்யக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 10 மணியளவில் அங்குள்ள விருத்தாசலம்-கடலூர் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைத்து, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாட்களுக்குள் மின்மோட்டார் சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.