எரியோடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


எரியோடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jan 2023 8:30 PM GMT (Updated: 14 Jan 2023 8:30 PM GMT)

எரியோடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

எரியோடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

எரியோடு அருகே நாகையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது, வைவேஸ்புரம் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் வைவேஸ்புரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் சீராக வழங்கக்கோரி கிராம மக்கள் நேற்று அங்குள்ள எரியோடு-கோவிலூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் கூறுகையில், வைவேஸ்புரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மின் மோட்டார் இயக்குவதற்கு முறையாக மின்சார வசதி பெறாமல் அருகே உள்ள மற்றொரு மின் இணைப்பில் இருந்து மின்கம்பியை பொருத்தி கடந்த 2 ஆண்டுகளாக மின் மோட்டார் இயக்கப்பட்டுள்ளது. இதனால் முறையாக அனுமதி பெற்று மின்மோட்டாரை பயன்படுத்த வேண்டும் என்று நாகையகோட்டை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

மின் இணைப்பு துண்டிப்பு

ஆனால் முறையாக மின்இணைப்பு பெறுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மின்வாரிய ஊழியர்கள், குடிநீர் மின்மோட்டாருக்கு இணைக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர். இதன்காரணமாக குடிநீர் வினியோகமும் கடந்த 10 நாட்களாக தடைபட்டது. எனவே குடிநீர் மின்மோட்டாருக்கு முறையாக மின் இணைப்பு பெற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து எரியோடு மின்வாரிய ஊழியர்களை போலீசார் வரவழைத்து, மின்மோட்டாருக்கு தற்காலிகமாக மின் இணைப்பு கொடுக்க அறிவுறுத்தினர். அதன்பேரில் மின்மோட்டாருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் முறையாக மின் இணைப்பு பெற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த மறியலால் எரியோடு-கோவிலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story