குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
பட்டிவீரன்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு ஊராட்சிக்கு உட்பட்ட கே.சிங்காரக்கோட்டை கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கே.சிங்காரக்கோட்டையில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சித்தரேவு ஊராட்சி செயலாளர் சிவராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனே குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.