குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி.

விக்கிரவாண்டி அருகே கெடார் ஊராட்சி பழைய காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் கேட்டபோது, மின்மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை கெடார் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராவின் கணவரான மணி என்பவர் டிராக்டர் மூலம் அப்பகுதி அருகே கால்வாய் பணிக்காக வைத்திருந்திருந்த தண்ணீரை பழைய காலனி பகுதிக்கு எடுத்து சென்று அங்கிருந்த மக்களிடம் பிடித்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்தர்கள், எங்களுக்கு இந்த தண்ணீர் வேண்டாம். மோட்டாரை சீரமைத்து வழக்கம்போல் நல்ல குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும் எனகேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கும், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அங்கிருந்த ஒருவரை தள்ளிவிட்டதாக தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் அங்குள்ள திருவண்ணாமலை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் தங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், மேலும் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை நெட்டி தள்ளிவிட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இது குறித்த தகவலின் பேரில் கெடார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story