வடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சேத்தியாத்தோப்பு அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சேத்தியாத்தோப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மழை நீர், வளையமாதேவி கிராமத்தை சூழ்ந்து நின்றது. மேலும் காட்டுநாயக்கன் தெருவில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் மூங்கில் கம்புகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் வடிகால் வாய்க்கால் அமைத்து தரக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு மகளிர் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, வருவாய் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.