குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
சின்னசேலம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சின்னசேலம்:
சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் உலகியநல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதிக்கு மட்டும் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் ஊராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கிராம மக்களை சமாதானம் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி கருணாகரன், ஊராட்சி செயலாளர் சேகர் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி, வறட்சியின் காரணமாக ஊராட்சி கிணற்றில் தண்ணீர் வற்றியுள்ளது. விரைவில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.