குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் வடக்கு தெருவில் சுமார் 600 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் இந்த நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றாமல் கடந்த சில மாதங்களாக பயன்பாடு இன்றி உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பயன்பாடு இன்றி உள்ள இந்த நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு பதில் இப்பகுதியில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாக போதிய குடிநீர் இன்றி அருகில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய நிலங்களில் உள்ள விவசாய கிணறுகளிலும் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு சமைப்பதற்கும், குடிப்பதற்கும் என அன்றாட தேவைகளுக்கு போதுமான தண்ணீர் இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த இப்பகுதி மக்கள் சூரியமணல்-புதுக்குடி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சூரியமணல்-புதுக்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.