தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மயானத்தை மீட்டு தரக்கோரி பாடையுடன் வந்த கிராம மக்கள்


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மயானத்தை மீட்டு தரக்கோரி பாடையுடன் வந்த கிராம மக்கள்
x

காலம், காலமாக பயன்படுத்தி வந்த மயானத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் பாடையுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

பாடையுடன் வந்த கிராம மக்கள்

தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட டொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு பாடையுடன் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அப்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைய முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றுபோலீசார் தெரிவித்தனர்.

அப்போது கிராம மக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் 5 பேர் கோரிக்கை மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கொண்டு வந்த பாடை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து டொக்கம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

மிரட்டல்

தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட டொக்கம்பட்டி கிராமத்தில் காலம், காலமாக பயன்படுத்தி வந்த மயான நிலத்தை அதே ஊரை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் அபகரித்து கொண்டார். ஊருக்கு பொதுவான மயான நிலத்தை இப்படி அபகரித்து கொள்வது நியாயம் தானா? என அவரிடம் முறையிட்ட போது யாராவது உயிரிழந்தால் அவரது வீடுகளிலேயே புதைத்து கொள்ளுங்கள். இங்கே வரக்கூடாது என மிரட்டல் விடுக்கிறார்.

இதையடுத்து மயான நிலத்தை மீட்டு தரக்கோரி சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களது கோரிக்கை மனு மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு கொடுத்த ஆவணங்களான ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே திரும்ப ஒப்படைக்க உள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் பாடையுடன் வந்ததால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story