குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா


குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா
x

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

கடலூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடவசதி இல்லை. இருப்பினும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிப்பதற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.இந்நிலையில் மாநகராட்சி சார்பில் கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் ஊராட்சி பகுதியில் 47 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதை அறிந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஊர்வலம்

இது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில் வெள்ளப்பாக்கத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்காக அதிகாரிகள் வந்து அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர்.இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் நேற்று ஏராளமானோர் கடலூர் குண்டுசாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். நுழைவு வாயில் அருகில் வந்த போது, அங்கு பாதுகாப்புக்காக நின்ற கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தர்ணா போராட்டம்

அதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நுழைவு வாயில் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிரவிளாகம், நத்தப்பட்டு, முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம் ஆகிய பகுதிகளில் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறோம்.

எங்களின் குடிநீர் ஆதாரமாகவும், கடலூர் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் தென்பெண்ணையாறு உள்ளது. ஆகவே தென்பெண்ணையாற்றங்கரையோரம் உள்ள வெள்ளப்பாக்கத்தில் குப்பை கிடங்கு அமைத்தால், குடிநீர் மாசுபட்டு, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே எங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது என்று கோஷமிட்டனர்.

மனு அளித்தனர்

இதை பார்த்த போலீசார், அவர்களில் முக்கிய நபர்களை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லுமாறும், மற்றவர்களை வெளியே நிற்குமாறும் கூறினர். இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று, அங்கு பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகனை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்ற அவர், இது பற்றி கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். ஆனால் அவர்கள், கோட்டாட்சியர் விசாரணை வேண்டாம். வேறு அதிகாரியிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர்.

பரபரப்பு

உடன் மாவட்ட வருவாய் அலுவலர், இது பற்றி கடலூர் மாநகராட்சி ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்தார். இதை கேட்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story