வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ஊட்டி அருகே புலி இறந்த விவகாரத்தில் விவசாயி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பொய் வழக்கில் கைது செய்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
ஊட்டி அருகே புலி இறந்த விவகாரத்தில் விவசாயி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பொய் வழக்கில் கைது செய்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இறந்து கிடந்த புலிகள்
ஊட்டி அருகே அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை மற்றும் அதன் அருகில் உள்ள வனப்பகுதியில் கடந்த 9-ந் தேதி மர்மமான முறையில் 2 ஆண் புலிகள் இறந்து கிடந்தன.
அதில், நீரோடையில் இறந்து கிடந்த 8 வயது புலிக்கு உடலில் காயங்கள் இல்லை. ஆனால், வனப்பகுதியில் இறந்து கிடந்த 3 வயது புலிக்கு முதுகு மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தன.
அதன்பிறகு நடந்த பிரேத பரிசோதனையில், நீரோடையில் இறந்து கிடந்த புலி விஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நீலகிரி உதவி வன பாதுகாவலர்(தலைமையிடம்) தேவராஜ் தலைமையிலான சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர்.
விவசாயி கைது
அப்போது, அந்த பகுதியில் ஒரு பசுமாடும் இறந்து கிடப்பது தெரியவந்தது. அந்த பசுமாடு யாருடையது? என்று விசாரித்தபோது, எமரால்டு பகுதியை சேர்ந்த சேகர்(வயது 58) என்பவருடையது என்பது தெரியவந்தது. மேலும் அவரது பசுமாட்டை புலி அடித்துக்கொன்றதும், இதனால் அவர் ஆத்திரம் அடைந்து இறந்த பசுமாட்டின் உடலில் விஷத்தை கலந்ததும், அதன் இறைச்சியை தின்றபோது புலி உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை வனத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
முற்றுகை; சாலை மறியல்
இந்தநிலையில் பொய் வழக்கு போட்டு சேகரை கைது செய்து விட்டதாக கூறி நேற்று அவரது மகன்கள் மற்றும் கிராம மக்கள் ஊட்டி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.
இதை அறிந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா, வனச்சரகர் சசிக்குமார் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பொய் வழக்கு
அப்போது கிராம மக்கள் கூறுகையில், இறந்த மாட்டை வனத்துறையினர் எங்களுக்கு காட்டவில்லை. அது சேகருக்கு சொந்தமானது இல்லை. பால் ஊற்றும் கூட்டுறவு சங்கத்தில் விசாரித்தால் உண்மை தெரியவரும். கடந்த 2019-ம் ஆண்டு சேகருக்கு சொந்தமான மாட்டை புலி அடித்து கொன்றது. அதற்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் தற்போது இறந்த மாட்டை தனக்கு சொந்தமானது என்று கூறினால், நஷ்ட ஈடு கிடைக்கும் என்பதால் அவர் அப்படி கூறி உள்ளார். அவருக்கு மனநிலையில் சற்று பாதிப்பு உள்ளது. கிராம மக்களிடம் முறையாக விசாரிக்காமல் பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்து உள்ளனர். அவரை விடுவிக்க வேண்டும் என்றனர்.
மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறும்போது, சேகரிடம் விசாரணை நடத்தியபோது தனது மாட்டின் கழுத்தில் கயிறு மற்றும் சங்கு இருக்கும் என்று கூறினார். இறந்து கிடந்தது எனது மாடுதான் என்றும் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையிலேயே அவரை கைது செய்தோம் என்றார்.