கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை
தத்தனூரில் 50 ஆண்டுகள் ஆகியும் தார்சாலை அமைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி கிராமத்தில் உள்ள காலனியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தார் சாலைகள் கடந்த 50 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் மண் சாலையாக மாறி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள், பெண்கள் உள்பட பெரும்பாலான மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேறும், சகதியுமான சாலையில் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே மண் சாலையை தார் சாலையாக அமைத்துதர வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும் கிராம சபை கூட்டங்களில் தனி தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை ஊராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்ள வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், விரைவில் தார் சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரை போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.