கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது ஆலத்தூர் தாலுகா, குரூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மங்கூன், எம்.ஜி.ஆர். நகர், குரூர் பிரிவு ரோடு, மட்டப்பாறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கூறுகையில், மங்கூன் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மயானத்தில் வீட்டுமனை பட்டா
இதில் மங்கூன், எம்.ஜி.ஆர். நகர், குரூா் பிரிவு ரோடு, மட்டப்பாறை பகுதிகளில் வசிக்கும் சுமார் 300-க்கும் ேமற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் தற்போது உள்ள மயானத்தை சுமார் 80 ஆண்டுகளாக இடுகாடாகவும், சுடுகாடாகவும் பயன்படுத்தி வருகிறோம். மேற்படி மயானத்தில் அரசு சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியிருப்பதாக தெரிகிறது. மயானத்தில் வீடு கட்டி குடியேறும் மக்கள், இறந்தவர்களின் உடலை அங்கு எரியூட்ட ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில், எங்களுக்கு மாற்று இடம் இல்லாத காரணத்தால் மயானத்தில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் எங்கள் கிராமத்திற்கு சமுதாய கூடம், ரேஷன் கடை கட்டிடம், பொது சுகாதார வளாகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, விவசாய களம் உள்ளிட்டவை கட்டுவதற்கு தேவையான நிலம் ஒதுக்கி அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள நிலத்தை வருங்கால பள்ளி விரிவாக்க பணிகளுக்கு வசதியாக கல்வித்துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் இது தொடர்பாக கோரிக்கை மனுக்களை அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
மோசடி
குன்னம் தாலுகா, பரவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் பெருமாள் கோவிலுக்கு முன்புறம் உள்ள இடத்தை 2 பேர் பொதுமக்கள் உபயோகத்திற்கு தானமாக கொடுத்துள்ளனர். அந்த இடத்தில்தான் அங்கன்வாடி மையம், நூலக கட்டிடம் உள்ளிட்டவை உள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தை ஓய்வு பெற்ற சர்வேயர் ஒருவர் ஏற்கனவே பணியாற்றியபோது தனது பெயருக்கு மாற்றி, தற்போது தனது மகன் பெயருக்கு தானசெட்டில்மென்ட் எழுதி, அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எனவே இடத்திற்கு மோசடியாக பட்டா பெற்றதை ரத்து செய்து அந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் இது தொடர்பாக கோரிக்கை மனுவை அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
மருதையாற்றை சீரமைக்க வேண்டும்
குன்னம் தாலுகா, பேரளியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ராகவன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான மருதையாறு மற்றும் அதன் கிளை ஓடைகளை முறையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பேரளி ஏரியை மேம்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தார்.
ஆலத்தூர் தாலுகா, குரும்பாபாளையத்தை சேர்ந்த விவசாயிகளில் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்களுக்கு கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் அருகே விவசாய நிலங்கள் உள்ளன. நீர்த்தேக்கத்தில் கசிவு உள்ளதால் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே எங்களது நிலத்தையும் அரசு எடுத்துக்கொண்டு இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
மொத்தம் 222 மனுக்கள்
கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 222 மனுக்களை பெற்றார். மேலும் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பெண் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும், மற்றொரு பெண் மாற்றுத்திறனாளிக்கு தையல் எந்திரமும், 2 மாற்றுத்திறனாளி பள்ளி மாணவிகளுக்கு காது கேட்கும் கருவிகளையும் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, உதவி ஆணையர் (கலால்) ஷோபா, வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.