கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x

கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரையை சேர்ந்த பொதுமக்கள் 8-வது வார்டு உறுப்பினர் சந்தோஷம் தலைமையில் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நடைபாதை தற்போது மறிக்கப்பட்டுள்ளது. அந்த பாதையில் குடிநீர் குழாய், தெரு விளக்குகள் உள்ளன. எங்களுக்கு அதில் நிரந்தர பாதை ஏற்படுத்தி தர முதல்-அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு நிரந்தர பாதை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

பட்டா கேட்டு...

பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 287 மனுக்களை கலெக்டர் பெற்றார். மேலும் அவர் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

வங்கி-கல்வி கடன் வழங்கல்

கடந்த வாரம் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் வேப்பந்தட்டை தாலுகா, நெய்குப்பையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் மாடு வாங்க வங்கி கடன் கேட்டும், பாதாங்கியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி பிரியா கல்விக்கடன் கேட்டும் மனு கொடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்ற கலெக்டர் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுரேசுக்கு வங்கி கடனாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், பிரியாவுக்கு கல்வி கடனாக மொத்தம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினையும் வழங்கினார். கூட்டத்தில் அனைத்து அரசு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story