அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராம மக்கள்
சீர்பாத நல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அல்லல் படுவதால் இதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடம் இருந்து வருகிறது
மூங்கில்துறைப்பட்டு
குளம்போல் நிற்கும் கழிவுநீர்
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது சீர்பாதநல்லூர் கிராமம். இங்கு வடக்குதெரு, தெற்குதெரு, கிழக்கு வீதி, மேற்கு தெரு, கோவில் தெரு, பள்ளிக்கூட தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகிறாா்கள்.
கால்வாய் இருந்தும் கழிவு நீர் செல்லாமல் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்பதை காண முடிகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேல்நிலை நீர்தேக்க தொட்டி
அடுத்து இங்குள்ள கிராமமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோவில் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதன் 4 தூண்களிலும் விரிசல்கள் ஏறுபட்டும், சிமெண்டு காரைகள் பெயர்ந்து இப்ப விழவோ, எப்ப விழவோ என்று பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. இருப்பினும் இந்த தொட்டியில் நீரேற்றி குடிநீர் வினியோகம்செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வது கிடையாது. இதனால் குடிநீர் மாசு கலந்து வருவதால் பொதுமக்கள் யாரும் குடிநீர் பிடிப்பதில்லை. பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் அப்பகுதி மக்கள் தொட்டியை இடிப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை அதை இடிக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் பிரச்சினை
மேலும் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன்பு மாணவ-மாணவிகளுக்காக மினி குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவ-மாணவிகளும், அப்பகுதி மக்களும் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த மினி குடிநீர் தொட்டியும் சேதம் அடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டதால் இங்கு குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெகு தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.
காட்சிபொருளான சுகாதார வளாகம்
இப்பகுதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் ஒன்று காட்சி பொருளாகவே உள்ளது. கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாத நிலையில் அதை மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. இதனால் திறந்த வெளி பகுதிகளை கழிப்பறையாக பயன்படுத்தி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இனிமேலாவது சுகாதார வளாகம் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதுபோன்று பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் சீர்பாத நல்லூர் கிராமத்தில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.