குவைத் நாட்டில் தவிப்பவர்களை மீட்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


குவைத் நாட்டில் தவிப்பவர்களை மீட்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x

குவைத் நாட்டில் வேலையில்லாமல் தவித்து வரும் 13 பேரை மீட்கக்கோரி கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

கண்ணீர் மல்க மனு

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது குன்னம் தாலுகா, கீழப்பெரம்பலூரை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் கண்ணீர் மல்க கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த 12 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 13 பேர் வேப்பூரை சேர்ந்த ஒரு ஏஜெண்டிடம் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் செலுத்தி கடந்த செப்டம்பர் மாதம் குவைத் நாட்டிற்கு கான்கீரிட் வேலைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு வேலை ஏதும் கொடுக்கப்படவில்லை. தற்போது அவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வருவதோடு, ஒரு பாலைவனத்தில் மாட்டி கொண்டனராம். அவர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஏஜெண்டிடம் கூறி, அவரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 13 பேரையும் மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கும், ஏஜெண்டிடம் கட்டிய பணத்தை திரும்ப பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

சாலை வசதி கேட்டு...

வேப்பந்தட்டை ஒன்றியம், தொண்டமாந்துறை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகுதியான முருகன் கோவில் ரோடு, புதுகாலனியில் வசிக்கும் பெண்களில் சிலர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் எங்கள் காலனி சாலை மோசமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, தொற்று நோயும் பரவி வருகிறது. எனவே கழிவுநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பலமுறை கொடுத்தும் இதுவரைக்கும் அவர்களில் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனிவரும் மழைக்காலத்தில் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் எங்கள் காலனிக்கு கழிவுநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைத்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். இதேபோல் வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராம ஊராட்சி வி.எம்.நகரில் வசிக்கும் மக்கள் சாலை வசதி கேட்டு மனு அளித்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் மனு

நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுக்களில், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் கசிவை தடுக்க, சுற்று கரையை வலுப்படுத்த வேண்டும். பழைய விராலிப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மாரியம்மன் கோவில் அருகே தண்ணீர் தொட்டி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் பழுதடைந்த மதகுகளையும், அதன் வரத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். மாவட்டத்தில் பல்நோக்கு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க ரஞ்சன்குடி கோட்டையை சீரமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வேப்பூரில்...

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் கொடுத்த மனுவில், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பூர் பஸ் நிலையத்தில் கழிவறைகள் வசதிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வேப்பூர் சுடுகாட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வேப்பூர் ஏரி, அதன் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

205 மனுக்கள்

வேப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேப்பூர் பஸ் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 205 கோரிக்கை மனுக்களை பெற்றார்.


Next Story