புறவழிச்சாலையை மாற்றி அமைக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


புறவழிச்சாலையை மாற்றி அமைக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x

புறவழிச்சாலையை மாற்றி அமைக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா, கீழ உசேன் நகரம் மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்தமனுவில், அரியலூர் புறவழிச்சாலையை முழுமை செய்யும் பொருட்டு, தொண்டப்பாடி வழியாக அம்மாகுளம் புறவழிச்சாலையினை இணைக்கும் வகையில் கீழே உசேன் நகரம் கிராம பொதுமக்களுக்கும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் 6 வீடுகளுக்கும் இடையூறாக அமையவுள்ள புறவழிச்சாலையை மறு ஆய்வு செய்து 200 மீட்டர் தள்ளி மாற்றி சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அரசு பள்ளி இடத்தை மீட்டு தரக்கோரி...

பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ் கொடுத்த மனுவில், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் 24 பேருக்கு பட்டா போட்டு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆலத்தூர் தாலுகா, ரசுலாபுரத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி கொடுத்த மனுவில், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். அ.தி.மு.க. ஆலத்தூர் ஒன்றிய இளைஞர் அணி தலைவரும், இரூர் கிளை செயலாளருமான முத்துசாமி கொடுத்த மனுவில், இரூர் கிராம ஊராட்சியில் அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு செய்து கொடுக்காத ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம்

இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன் கொடுத்த மனுவில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரமும், பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் வேட்டி, துண்டு, சேலை வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட கலெக்டர் வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 217 மனுக்களை பெற்றார். முன்னதாக அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஆவின் பாலகம் அமைப்பதற்கான மானியமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் 160 மதிப்பிலான தையல் எந்திரங்களையும் வழங்கினார்.


Next Story