கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்
அரியநாயகிபுரம் மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன் கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
அரியநாயகிபுரம் மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன் கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மதுக்கடை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பஞ்சாயத்து அருணாச்சலபுரத்தில் மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை மீறி கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது.
எனவே அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் சண்முகவேல் மதுரை ஐகோர்ட்டில் கடைக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தார். அப்போது நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஒரு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது அந்த கடிதத்தில் பஞ்சாயத்து தலைவர் சண்முகவேல் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று எழுதி கையொப்பம் இடப்பட்டிருந்ததாக இருந்தது. இதனைப் பார்த்த சண்முகவேல் தான் அந்த கடிதத்தை எழுதவில்லை என்றும், அந்த கையெழுத்து என்னுடையது இல்லை என்றும் கூறி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். உடனடியாக கலெக்டர் ஆகாஷ் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.
திறக்கக்கோரி மனு
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒரு தரப்பினர் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதைத் தொடர்ந்து நேற்று அரியநாயகிபுரம் அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் கொடுத்துள்ள மனுவில், தற்காலிகமாக அடைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.