வானூர் அருகே திடீர் போராட்டம்செம்மண் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்புசாலை மறியல்; 150 பேர் கைது
வானூர் அருகே செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தலகானிக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தில் செம்மண் குவாரி அமைக்க அரசு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் கிராமத்தில் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும், எனவே குவாரி அமைக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சாலைமறியல்
இந்த நிலையில் செம்மண் குவாரியில் வேலையை தொடங்க சிலர் பொக்லைன் எந்திரங்களுடன் தலகானிக்குப்பம் கிராமத்துக்கு வந்தனர். இதை அறிந்த கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தலகானிக்குப்பம் - மரக்காணம் சாலையில் ஒன்று திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரம்மதேசம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து, அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், செம்மண் குவாரி அமைக்க விடமாட்டோம் என கோஷம் எழுப்பினர்.
150 பேர் கைது
இதையடுத்து பள்ளி மாணவர்களை தவிர மறியலில் ஈடுபட்ட சுமார் 150 பேரை போலீசார் கைது செய்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணாடி உடைப்பு
இதற்கிடையே கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் செம்மண் குவாரி அங்கு செயல்பட தொடங்கியது. அங்கிருந்து லாரிகளில் 3 லோடு செம்மண் ஏற்றி செல்லப்பட்டது.
அப்போது, காரட்டை கிராமம் வழியாக சென்ற ஒரு லாாி மீது மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.