அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x

சிறுமலை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை ஊராட்சியில் பழையூர், புதூர், அகஸ்தியர்புரம், தென்மலை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் தென்மலையில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு தொடக்கப் பள்ளி மட்டும் செயல்பட்டு வருகிறது. உயர்நிலை பள்ளிக்கு சிறுமலை புதூருக்கும், மேல்நிலைப்பள்ளிக்கு திண்டுக்கல்லுக்கும் அங்குள்ள மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் திண்டுக்கல்லில் இருந்து மாலை 4 மணிக்கு சிறுமலைக்கு செல்லக்கூடிய அரசு பஸ் பழையூர், புதூர் வழியாக அகஸ்தியர்புரம் வரை செல்கிறது. ஆனால் தென்மலைக்கு இந்த பஸ் வருவதில்லை. இதனால் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு மாணவ- மாணவிகள் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே மாலைநேரத்தில் இயக்கப்படுகிற அரசு பஸ்சை தென்மலை வரை இயக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் விசாகன் ஆகியோரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இருப்பினும் பஸ்சை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், நேற்று காலை தென்மலையில் இருந்து திண்டுக்கல்லுக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமலை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெள்ளிமலை, வருவாய் ஆய்வாளர் அழகுமலை, கிராம நிர்வாக அலுவலர் வசந்த், திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஏட்டு கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நாளை முதல் மாலை நேரத்தில் தென்மலை வரை அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story